பாரிஸ் ஒலிம்பிக் : இறுதி போட்டியில் மனு பாக்கர் ..! 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை ..!
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிசில் 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் தொடங்கின. அதில்10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி இறுதிப் போட்டியில் சீனா, கொரியாவை வீழ்த்தி இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கணக்கை தொடங்கியது.
அதே 10மீ ஏர் ரைபிள் கலப்பு போட்டியில் இந்திய அணியின் அர்ஜுன் பபுதா – ரமிதா மற்றும் இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடிகள் பதக்கங்களை எதிர்நோக்கி களமிறங்கினர். ஆனால், அதில் பபுதா – ரமிதா 6-வது இடைத்தையும், இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் 9-வது இடைத்தையும் பிடித்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக கருதப்படும் 22-வயதான மனு பாக்கர், 580 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து நேராக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், துப்பாக்கி சுடுதல் மகளிர் ஒற்றையர் பிரிவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். இவர் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் மகளீர் 10மீ.ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நிலையில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தருவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.