பாரிஸ் ஒலிம்பிக் : ஹாக்கியில் அசத்தல் ..! இந்தியாவுக்கு 4-வது வெண்கல பதக்கம்!

Indian Hockey Team

பாரிஸ் : 33-வது ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி விளையாடியது. இந்திய அணி இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் வென்ற நிலையில், நேற்று மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சற்று இந்தியர்களின் இதயத்தை நொறுக்கியது.

இந்நிலையில், இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியை ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி இருந்தது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று விளையாடிய ஹாக்கி போட்டியில் ஸ்பெய்ன் அணியை 2-1 என த்ரில்லாக வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கின்றனர்.

மேலும் இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் கடைசி போட்டி இது என்பதனால், இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் முதல் குவார்ட்டரில் ஸ்பெய்ன் அணி வீரர்கள் தீவிரமான அட்டாக்கிங் விளையாட்டை மேற்கொண்டனர். ஆனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

அதன் பின் தொடங்கிய 2-வது குவார்ட்டரில் தொடக்கத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்கள். இதனால், 1-0 என ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. பின் அந்த 2-வது குவார்ட்டர் முடிவில் இந்திய அணிக்கு கிடைத்த பெனல்ட்டி கார்னரை இந்திய அணியின் கேப்டனான ஹர்மான்ப்ரீத் கோல் அடித்து அசத்தினார்.

இதனால், 1-1 என போட்டி சமநிலை ஆனது, அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 3-வது குவார்ட்டரின் முதல் சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை மீண்டும் ஹர்மான்ப்ரீத் கோல் அடித்து மிரட்டினார். இதன் மூலம் 2-1 என இந்திய அணி போட்டியில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு ஸ்பெயின் அணி கடுமையாக முயற்சித்த போதும் இந்திய அணியின் அற்புதமான டிபேன்ஸ் காரணமாக கோல் அடிக்க முடியாமல் ஸ்பெயின் அணி திணறியது. இதனால், போட்டி நேர முடிவில் இந்திய அணி 2-1 என் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றனர்.

இதன் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே இந்தியா ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்