ஒத்திவைக்கப்படுகிறது ஒலிம்பிக்… ஜப்பான் பிரதமர் பாராளுமன்றத்தில் தகவல்…
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கினால், எங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,’ என கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி-ஆகஸ்ட் மாதம் 9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்பட்டது. இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டோம் என கனடா, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பார்லிமென்டில் பேசுகையில், ‘ஒலிம்பிக் விளையாட்டை முழுமையாக நடத்த விரும்புகிறோம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால் நமக்கு வேறு வழியில்லை. வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் தான் முக்கியம் என்ற ஒலிம்பிக் தத்துவத்தின் படி, தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் திட்டம் இல்லை,’ என்றார்.
ஜப்பான் பிரதமரின் அறிவிப்பை அடுத்து திட்டமிட்டபடி ஒலிம்பிக் துவங்குவது சந்தேகம் தான். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்.