7-வது முறை கோப்பையை வென்ற நோவக் ஜோகோவிச்.!
உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கான 2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியானது, இத்தாலியில் உள்ள டுரினில் நடைபெற்றது. நவம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 5 மற்றும் 4 பேர் கொண்ட 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இவருக்கு எதிராக இத்தாலிய வீரர் ஜன்னிக் சின்னர் விளையாடினார்.
இரண்டு செட்களாக நடந்த இந்த இறுதிப்போட்டியில், இரண்டு செட்டிலும் நோவக் ஜோகோவிச் முன்னிலைப் பெற்றார். அதன்படி, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜன்னிக் சின்னரைத் தோற்கடித்து, ஏழாவது முறையாக நிட்டோ ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
நோவக் ஜோகோவிச் இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம், 7 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் மற்றும் 40 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏடிபி பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்,டேனியல் மெட்வெடேவ், ஜன்னிக் பாவி, ஆண்ட்ரி ரூப்லெவ், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஹோல்கர் ரூன் இந்த ஆண்டின் ஏடிபி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த டென்னிஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.