காசாவிற்கு ஆதரவாக வாசகம்.! நாளை உஸ்மான் கவாஜா விளையாட தடையா..?
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில் நீண்ட நாள்களுக்கு பிறகு தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா களமிறங்க உள்ளார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற உஸ்மான் விளையாடுவதற்கு முன்பே ஒரு சர்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்க உள்ள உஸ்மான் கவாஜா தனது காலணியில் எழுதப்பட்ட செய்தி இதற்கு காரணம், நேற்று பயிற்சியின் போது கவாஜா தனது பேட்டிங் ஷூவில் “எல்லா உயிர்களும் சமம்” மற்றும் “சுதந்திரம் ஒரு மனித உரிமை” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த வசனம் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் எழுதியுள்ளார் என பலர் கூறுகின்றனர். இருப்பினும், போட்டியின் போது இதுபோன்ற செய்திகள் கொண்ட காலணிகளை அணிந்து விளையாட ஐசிசி தடை செய்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் “காசாவைக் காப்பாற்றுங்கள்” மற்றும் “பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்” போன்ற வாசகங்களுடன் கூடிய பேண்டை அணிந்து விளையாடினார்.
அந்த நேரத்தில், மொயீன் அலிக்கு ஐசிசி கடுமையான எச்சரிக்கையை கொடுத்தது. மேலும், கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி இதுபோன்ற பிரச்சினைகளில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உங்களுக்கு சுதந்திரம்உள்ளது என போட்டி நடுவர் மொயீன் அலியிடம் கூறினார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செய்தி தொடர்பாளர் கூறுகையில், சர்வதேச போட்டியின் போது அரசியல், மதம் அல்லது இனம் சார்ந்த தொடர்பான செய்திகளை ஐசிசியின் உபகரணங்கள் மற்றும் ஆடையில் பயன்படுத்த விதிகள் அனுமதிக்காது என்று கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் உஸ்மான் அதே காலணியை அணிந்து விளையாடுவாரா..? அல்லது வேறு காலணி அணிந்து களத்தில் இறங்குவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் உஸ்மான் கவாஜா தனது சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தார்.
உஸ்மான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மகளின் புகைப்படத்தை பகிர்ந்து, “என் மகள் ஆயிஷாவுக்கு தோட்டத்தில் பூச்சி கடித்தால் ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால் நான் எனது மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் கிடைத்தது. ஆனால், சில குழந்தைகள் இதை விட மோசமான நிலையில் இது போன்ற வசதிகளை அவர்களால் பெற முடியவில்லை என்பதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது” என பதிவிட்டு இருந்தார்.
.