கோப்பையை வென்ற நியூசிலாந்து மகளிர் அணி..! இந்தியா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கேப்டன்!
உலகக்கோப்பை வெற்றிப்பாதைக்கு இந்தியா எங்களுக்கு ஒரு தோணியை அமைத்துக்கொடுத்துள்ளது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார்.
துபாய் : 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெறச் செய்துள்ளது.
வெற்றிபெற்ற குஷியுடன் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது தான் இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வெல்ல ஒரு காரணம் எனப் பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது ” இந்த நேரத்தில் கோப்பையை வென்றதை நினைத்து நாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை எங்களுடைய வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
எனவே, இந்த மகிழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற இது தான் காரணம் என தனித்தனியாகச் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணி ஒன்றாக இணைந்து செயல்பட்டது தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு இன்னும் சில நாட்கள் தூக்கமே வராது அந்த அளவுக்கு நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். ” எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய சோஃபி டிவைன் ” இந்த நேரத்தில் கோப்பையை வெல்லப் பல விஷயங்கள் எனப் பேசினால். அதற்கு இந்தியாவும் ஒரு முக்கியமான காரணம் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இந்தியாவைப் போன்ற அணியை நாங்கள் வென்றது எங்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடப் பெரிய தைரியமாக இருந்தது.
எனவே, எங்களுக்கு இந்தியா இந்த உலகக்கோப்பையை வெல்ல ஒரு தோணியை அமைத்துக் கொடுத்துள்ளது” எனவும் நெகிழ்ச்சியாக சோஃபி டிவைன் பேசினார். கோப்பையை வென்றது தொடர்ந்து இந்தியாவைப் பற்றியும் இவர் பேசியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.