தேசிய விளையாட்டு தினம் : வரலாறு முதல் பிரதமர் மோடி வாழ்த்து வரை!
டெல்லி : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உருவான வரலாறு என்னவென்று பார்ப்போம்.
நாம் விளையாடும் விளையாட்டுகள் வேடிக்கையைத் தாண்டி அது நமது ஆரோக்கியத்தையும் நம் உடல் தகுதியையும் மேம்படுத்துகின்றன. மேலும் விளையாட்டு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். இன்று கொண்டாடப்படும் இந்த தேசிய விளையாட்டு தினம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காகவும், உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் நாளாகவும் எடுத்துக்காட்டுகிறது.
வரலாறு :
இன்று நாம் அனுசரிக்கின்ற இந்த தேசிய விளையாட்டு தினம் என்பது கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் முன்னாள் ஹாக்கி ஜாம்பவானான தியான் சந்த் அவர்கள் தான். 1905-ம் ஆண்டு ஆகஸ்ட்-29 அலகாபாத்தில் ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தவர் தான் தியான் சந்த்.
அவரது பிறந்த நாளை தான் நாம் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடி வருகிறோம். தியான் சந்த் தனது தந்தையின் அறிவுரைகளைப் பின்பற்றி ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் பணியாற்றிய போது தான் தியான் சந்த் ஹாக்கியை விளையாடத் தொடங்கினார். ஹாக்கியில் தனது திறமையை விரைவாக வளர்த்துக் கொண்ட அவர் நம் இந்திய நாட்டிற்கு பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தார்.
இதன் விளைவாக 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முக்கிய வீரராகவே திகழ்ந்தார். மேலும், 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாக்கி உலகில் நீடித்த இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார்.
அதிலும், 1936 ஆண்டு நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக 3 கோல்களை அடித்து இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். மேலும், தியான் சந்தின் தலைமையில் இந்தியாவின் ஹாக்கி அணி பல சாதனைகளின் உச்சத்தைப் படைத்துள்ளது. ஓய்வு பெற்ற பிறகும், ஹாக்கி விளையாட்டிற்குத் தொடர்ந்து அவரது பங்களிப்பை அளித்தார்.
அதன் பிறகு பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதோடு, ராஜஸ்தானில் உள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பின் 1979-ம் ஆண்டில் டிசம்பர்-3 ம் தேதி புற்று நோய் காரணமாக அவரது 75-ம் வயதில் காலமானார்.
இவரையும், இவரது பெருமையையும் கௌரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இந்திய அரசு அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது. அதன்படி தொடர்ந்து 11 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு தற்போது 12 ஆண்டிலும் காலெடுத்து வைக்கிறோம். ஹாக்கி ஜாம்பவானாக தியான் சந்தை “Wizard Of Hockey” அதாவது “ஹாக்கியின் மந்திரவாதி” என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம் :
ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினத்தன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல ரத்னா விருது போன்ற விளையாட்டு தொடர்பான அனைத்து விருதுகளையும் அந்தந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் நாட்டை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொண்டாட்டம் :
இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் ஏதேனும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த நாளின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதற்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
அதிலும் வெளிப்புற விளையாட்டுகளான ஹாக்கி, டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, கோ-கோ, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளும் உள்ளரங்க விளையாட்டுகளான செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா போன்ற விளையாட்டுகளும் நடத்தி இந்த தேசிய விளையாட்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து :
அதனைத் தொடர்ந்து, தேசிய விளையாட்டு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் எனது தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள். இன்றைய நாள் நாம் மேஜர்.தியான் சந்தை நினைவு கொள்கிறோம். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இந்தியாவுக்காக விளையாடிய அனைவரையும் பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் தான் இந்த நாள். நம் அரசாங்கம் விளையாட்டை ஆதரிப்பதற்கும், இளைஞர்கள் விளையாடுவதற்கும், அவர்கள் பிரகாசிக்கும் திறனை உறுதி செய்வதற்கும் உறுதி பூண்டுள்ளது”, எனப் பதிவிட்டிருந்தார்.