IndVsSA: பந்துவீச்சில் வெறித்தனம் காட்டிய சிராஜ்! ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (ஜனவரி3) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை கொடுத்து தடுமாறி விளையாடி வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2, டீன் எல்கர் 4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் இழந்தார்கள்.
அவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3, ஆகியோரும் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து வெளியேறினார்கள். டேவிட் பெடிங்ஹாம்12 , கைல் வெர்ரைன் 15 , மார்கோ ஜான்சன் 0, கேசவ் மகாராஜ் 3, ககிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 4 என ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
23.2 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
முகமது சிராஜ் வீசிய பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்கள் பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.