IND vs NZ : இந்தியாவை சுருட்டிய மிட்செல் சான்ட்னர்! 103 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 156 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களில் சுருண்டது. பேட்டிங்கை பொறுத்தவரையில், நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்து இருந்தார்கள்.
பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்கள். நியூசிலாந்து அணி இன்னிங்ஸில் 259 ரன்கள் குவித்த நிலையில், அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய, முதல் பேட்டிங் இன்னிங்ஸை தொடங்கியது ஆரம்பத்திலிருந்தே தடுமாறி விளையாடி விக்கெட்களை கொடுத்து வந்தது.
இறுதியாக, இரண்டாம் நாளான இன்று 45.3ஓவர்களில் தங்களுடைய 10 விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 103 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்டை இழக்க முக்கியமான காரணமே, மிட்செல் சான்ட்னர் தான்.
இவருடைய சுழற் பந்தில் தான் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட் விட்டது. மொத்தமாக, முதல் இன்னிங்ஸில் மட்டும் இவர் 7 விக்கெட் எடுத்து போட்டியை நியூசிலாந்து அணி பக்கம் திருப்பி இருக்கிறார். மேலும், இந்திய அணியில், ரோஹித் 0, விராட் கோலி 1, பண்ட் 18, சர்பராஸ் கான் 11, போன்ற முக்கிய வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
அதிகபட்சமாக இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, சுப்மன் கில் 30, ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 156 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணி தற்போது தங்களுடைய இரண்டாவது பேட்டிங் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.