மெஸ்ஸிக்கு வந்த கொலை மிரட்டல்; துப்பாக்கி மனிதரின் எச்சரிக்கை.!
மெஸ்ஸிக்கு சொந்தமான அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்கள் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்திற்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் இரவில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த நபர்கள் மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கொலை மிரட்டல் செய்தியை விட்டுச்சென்றுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவுகளில் 14 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர், அவர்கள் மெஸ்ஸிக்கு எழுதிய அந்த செய்தியில், மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ஜாவ்கின் ஒரு நார்கோ, அவர் உங்களைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவின் மேயர், பப்லோ ஜாவ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜாவ்கின் கூறும்போது, நகரத்தில் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இரவு 3 மணிக்கு இருவர் மோட்டார் பைக்கில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதை நேரில் பார்த்த ஒருவர் உறுதிப்படுத்தினார். இருவரில் ஒருவர் இறங்கிவந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, செய்தியை கீழே போடு விட்டு சென்றதாக அவர் கூறினார்.
ரொசாரியாவில் தற்போது இது போன்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மேயர் தெரிவித்தார். ரொசாரியோ, அர்ஜென்டினாவில் போதைப்பொருள் கடத்தல் நகரமாகவும் மிகவும் வன்முறை நகரமாகவும் மாறியுள்ளது, 2022 இல் 287 கொலைகள் நடந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.