மெஸ்ஸி ஜெர்சிகள் ரூ.65 கோடிக்கு விற்பனை.. ஒரு ஜெர்சி விலை எவ்வளவு தெரியுமா ..?
லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த 6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது.
மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் கிராஸ் உள்ளது. அதனால்தான் மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சியை வாங்கும் போட்டி நிலவியது. சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் லெக் ஆட்டங்களில் மெஸ்ஸி இந்த ஜெர்சிகளை அணிந்திருந்ததாக Sotheby’s கூறியது. இந்த ஆண்டு, விளையாட்டு தொடர்பான பொருட்களின் ஏலத்தில், இந்த ஜெர்சிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. மெஸ்ஸி ஜெர்சிகளுக்கான ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
36 வயதான லியோனல் மெஸ்ஸி எட்டு முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான ஃபிஃபாவின் சிறந்த ஆண் வீரர் விருதை மெஸ்ஸி வென்றார். 2022 ஃபிஃபா உலகக்கோப்பையில் தனது அணியை சாம்பியனாக்குவதில் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றினார். அந்த போட்டியில் மெஸ்ஸி ஏழு கோல்களை பதிவு செய்திருந்தார். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா தனது மூன்றாவது பட்டத்தை வென்றது.
நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் எடுக்கப்பட்டது. மெஸ்ஸி தற்போது இண்டர் மியாமி அணிக்காக கிளப் கால்பந்து விளையாடி வருகிறார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுடனான தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு மெஸ்ஸி அமெரிக்க கிளப் இன்டர் மியாமியில் சேர்ந்தார்.