பதக்கங்கள் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல… நாட்டிற்கும் மகிழ்ச்சி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை.!
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து கபில்தேவ் தலைமையிலான முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியினர் அறிக்கை.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சிங்கிற்கு எதிராக, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் மற்றும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது பார்த்து மனவேதனை அடைந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான அணியினர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் பதக்கங்களை பேரணியாக சென்று புனித கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்ததைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம், அவசர முடிவு எதுவும் எடுக்கவேண்டாம் என அவர்களை கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் கடின உழைப்பு, பல வருட முயற்சி, தியாகம், மற்றும் மன உறுதி கொண்டு சம்பாதித்த பதக்கங்கள் அவை.
பதக்கங்கள் அவர்களுக்கு மட்டுமல்ல, தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் அதில் அடங்கும். இந்த விஷயத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்று நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்களின் குற்றச்சாட்டுகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.