2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு மேரிகோம் தகுதி.!
- சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது.
- இன்று மேரிகோம், நிகாத் ஜரீன் இருவரும் மோதினர். இந்த போட்டியில் மேரிகோம் 9-1 என்ற புள்ளி கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி, ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார்.
சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணி இருந்து 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது.
இந்த தகுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை வீழ்த்தி நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றி பெற்றார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம் , ரிது கிரிவாலை வீழ்த்தினார். இன்று 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீன் இருவரும் மோதினர். இந்த போட்டியில் மேரிகோம் 9-1 என்ற புள்ளி கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி உள்ளார்.
2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரிகோம் தகுதி பெற்று உள்ளார்.மேரிகோமை நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு செய்யக்கூடாது. அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும் என நிகாத் ஜரீன் வலியுறுத்தி இருந்த நிலையில் இன்று இருவருக்கும் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.