ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?
நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா ஹைதராபாத் அணியிலும், ராகுல் பெங்களூரு அணியிலும் இணைய உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் சில வீரர்களை விடுவித்து வேறு வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் , வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே எந்தெந்த அணியில் எந்தெந்த முக்கிய வீரர்களை அணி நிர்வாகம் விடுவிக்கப் போகிறது என்கிற தகவல் அரசல், புரசலாகப் பேசப்பட்டு வருகிறது.
அப்படி இதுவரை, எந்தெந்த வீரர்களுடைய பெயர் அப்படி வந்திருக்கிறது என்பது பற்றிப் பார்க்கலாம்.
ரோஹித் சர்மா :
- மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி, 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படாமல் வீரராக விளையாடினார். கேப்டனாக, ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அவரை வேறு அணி ஏலத்தில் எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல். ராகுல் :
- லக்னோ அணியில் கேப்டனாக விளையாடி வந்த, கே.எல்.ராகுல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் லக்னோ அணியிலிருந்து விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் வாங்கி அணியின் கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
க்ளென் மேக்ஸ்வெல் :
- பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக அவரை பெங்களூர் அணி விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெங்கடேஷ் ஐயர் :
- சில வருடங்களாகக் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரைக் கொல்கத்தா அணி விடுவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இளம் வீரர் என்பதால் நிச்சியமாக அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஷீத் கான் :
- குஜராத் அணிக்காக விளையாடி வரும் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ரஷித் கான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியிலிருந்து விலகவுள்ளதாகவும், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் :
- பெங்களூர் அணிக்காக, கேப்டனாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் அவரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி விடுவித்தால் பல அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க போட்டிப்போடும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீரர்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏலம் நடந்தால் மட்டும் தான் எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் எடுக்கப்போகிறது என்பது தெரியவரும். எனவே, ஏலம் நடைபெறுவது வரை பொறுத்திருந்து பார்ப்போம்.