Karim Benzema retires: சர்வதேச போட்டிகளில் இருந்து பென்சிமா ஓய்வு!
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சில ரசிகர்கள் கூறுகையில், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கரீம் பென்சிமா, போக்பா ஆகியோர் இருந்திருந்தால், அர்ஜென்டினா அணியை பிரான்ஸ் அணி நிச்சயம் வீழ்த்தி இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
ஏனென்றால், கரீம் பென்சிமா நடப்பு ஆண்டுக்கான “பாலன் டி ஓர்” விருதை வென்று சாதனை படைத்திருந்தார். மேலும், கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றதற்கு கரீம் பென்சிமா முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து பென்சிமா விலகிய போது, ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சமயத்தில், கரீம் பென்சிமா தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து பென்சிமா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக 2007ம் ஆண்டு முதல் விளையாடி வரும் கரீம் பென்சிமா, இதுவரை 97 போட்டிகளில் விளையாடி 37 கோல்கள் அடித்துள்ளார்.