இன்று தொடங்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர்! முதல் போட்டி யாருக்கு?
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கோலாகலமாக கொல்கத்தாவில் முதல் போட்டியுடன் தொடங்குகிறது.
கொல்கத்தா : ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசனானது இன்று கொல்கத்தாவில் முதல் போட்டியுடன் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி அணியும், மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் ஐஎஸ்எல் கால்பந்து வரலாற்றில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மோகன் பகான் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மீதம் 9 போட்டிகளையும் வென்று மும்பை அணி வலுவான அணியாக இருந்து வருகிறது.இதனால், இன்றைய போட்டியில் மும்பை அணி வீழ்த்தி இந்த மோசமான சாதனையை மாற்றுவதற்கு முற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அதை விட சற்று குறைவாகவே இந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கு இருந்து வருகிறது. இருந்தாலும், கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற இடங்களில் இந்த கால்பந்து தொடருக்கு தீவிர ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்றே கூறலாம்.
மேலும் இந்த தொடரில் இன்று விளையாடும் இந்த இரு அணிகளை தாண்டி சென்னையின் எஃப்சி, பெங்களூரு எஃப்சி, ஈஸ்ட் பெங்கால், எஃப்சி கோவா, ஐதராபாத், கேரளா ப்ளாஸ்டர்ஸ், ஜாம்ஷெத்புர், ஒடிசா எஃப்சி, பஞ்சாப் எஃப்சி,புதிய அணியான முகமைதான் ஸ்போர்ட்டிங் கிளப் என மொத்தம் 13 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.
சுமார் 2 மாதங்களுக்கும் மேல் நடைபெறும் இந்த ஐஎஸ்எல் தொடரின் போட்டிகள் அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா ஆப்பிலும் நேரலையில் காணலாம் என கூறியுள்ளனர்.