ஐபிஎல் 2025 : அந்த 3 ஆல்-ரவுண்டர்களை குறிவைக்கும் மும்பை?
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் 3 ஆல் -ரவுண்டர்களை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொண்டு விடுவிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.
அதில் குறிப்பாக, திறமையான வீரர்களை பல கோடிகள் செலவு செய்து எடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மெகா ஏலத்தில், எந்த வீரர்களை எல்லாம் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு படி அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால், மும்பை அணி ஏலம் என்றாலே நட்சத்திர வீரர்களை குறி வைத்து எடுப்பதில் வல்லவர்கள்.
இன்னும் ஏலம் நடைபெற சில நாட்கள் இருந்தாலும், நம்பத்தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்கள் பற்றிய சீக்ரெட் தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மும்பை அணி அபிஷேக் சர்மா, பில் சால்ட் மற்றும் கே.எல்.ராகுல் என 3 நட்சித்திர ஓப்பனர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.
அந்த தகவலை தொடர்ந்து, தற்போது 3 தரமான ஆல்ரவுண்டர்களான கிளென் மேக்ஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, ரஷித் கான் ஆகியோரை குறி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கிளென் மேக்ஸ்வெல்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் சரியாக விளையாடவில்லை என்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இருந்தாலும், எந்த சமயத்தில் அணி சிக்கி கொண்டிருந்தாலும் வெற்றி பெற வைக்கக்கூடிய அனுபவம் அவரிடம் இருக்கும் காரணத்தால், அவரை பெங்களூர் அணி விடுவித்தால் மும்பை அணி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரச்சின் ரவீந்திரா
சென்னை அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.
அதிலும், பேர் செல்லம் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு சில போட்டியில் திருப்பு முனை விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், இவரை போல இளம் ஸ்பின் வீரரை அணியில் எடுத்தால் சரியாக இருக்கும் என மும்பை அணி அவரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷித் கான்
குஜராத் அணிக்கு முக்கிய தூணாக திகழும் ஒரு ஆல்ரவுண்டர் என்றால் அவர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய விளையாட்டு அணிக்கு முக்கியத்துவமாமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஐபிஎல் 2024ஐ திரும்பிப் பார்க்கும்போது, ஆர்சிபிக்காக மேக்ஸ்வெல்லைப் போலவே, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷித் கானும் எதிர்பார்த்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.எனவே, அவரை குஜராத் அணி விடுவிக்கவுள்ளதாகவும், அவரை மும்பை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.