ஐபிஎல் 2025 : கழட்டிவிட்ட லக்னோ! கே.எல்.ராகுலுக்கு தூண்டில் போடும் 3 அணிகள்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி ஆகிய மூன்று அணிகள் கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணியிலும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது.
அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் அணியிலிருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட வாக்கு வாதம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அணியிலிருந்து கே.எல் .ராகுல் விலகவுள்ளதாகவும் அரசல் புரசலான செய்து ஒன்று பரவிக்கொண்டு இருந்தது. இப்போது லக்னோ அணியும் அவரை தக்க வைக்க வில்லை என்பதை அவரை எடுக்க 3 அணிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி
டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை நிர்வாகம் தக்க வைக்கவில்லை. அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோரை தக்க வைத்துள்ளது. எனவே அணிக்கு கேப்டனும் வேண்டும். அதைப்போலத் தரமான கீப்பரும் வேண்டும். இதன் காரணமாகத் தான் கே.எல்.ராகுலை அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்
இதற்கு முன்பு கே.எல். ராகுல் 2018 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். குறிப்பாக, 2020 மற்றும் 2021 இல் அவர் தான் அணிக்கு கேப்டனாக இருந்தார். கர்நாடகாவைத் தளமாகக் கொண்ட அவர் பஞ்சாப் அணிக்காக பேட்டிங் செய்யும் போதெல்லாம் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். எனவே, பஞ்சாப் அணியும் இந்த முறை அவரை ஏலத்தில் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர்
பெங்களூர் ரசிகர்கள் அனைவருடைய ஆசையாக இருப்பது என்னவென்றால், இந்த முறை கே.எல்.ராகுல் பெங்களூர் அணியில் விளையாடவேண்டும் என்பது தான். கே.எல்.ராகுலை மைதானத்தில் ரசிகர்கள் பார்த்தால் கூட ஆர்சிபி கேப்டன் என்று தான் கரகோஷமிட்டு வருகிறார்கள்.
இந்த முறை பெங்களூர் விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்க வைத்துள்ளது. எனவே, கேப்டனாக விளையாடுவதற்குத் தொடக்க வீரராகக் களமிறங்க கே.எல்.ராகுல் சரியானவராக இருப்பார் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 3 அணிகள் கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், எந்த அணி எவ்வளவு தொகைக்கு அவரை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.