ஐபிஎல் 2025 : “அஸ்வினை குறிவைக்கும் சிஎஸ்கே”.. 3 முக்கிய காரணங்கள் என்ன?
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அஸ்வினை விடுவித்தால் சென்னை அணி அவரை எடுக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்ற பேச்சு இப்போதே எழும்ப தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அணி விடுவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, அப்படி அவரை ராஜஸ்தான் விடுவித்தால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அணிக்கு அவர் புதிதான வீரரும் இல்லை. ஏனென்றால், அவர், 2009-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடித் தான் அவர் தனது ஐபிஎல் பயணத்தை ஆரம்பித்தார்.
அதன்பிறகு தான் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் என வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி வருகிறார். எனவே, அவர் ஏற்கனவே சென்னை வீரர் என்பதால் அவரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களைக் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை அணி அவரை ஏலத்தில் கூறி வைக்க 3 முக்கியமான காரணங்கள் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்…
சென்னை வீரர்
அஸ்வின் சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு வீரர். எனவே, சென்னை மைதானம் அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. சென்னை மைதானத்தைப் பற்றிய விவரங்கள் எப்படி பந்து வீசினால் சரியாக இருக்கும் என அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே, ஐபிஎல் போட்டிகளில் 7 போட்டி ஹோம் கேம் வரும். அப்படி வந்தால் அவர் எந்த அளவுக்கு எதிரணிக்கு ஆபத்தான பந்துவீச்சாளராக இருப்பார் என்பது சொல்லியா தெரியவேண்டும்? எனவே, சென்னை அணி அவரை குறி வைக்க இது ஒரு முக்கிய காரணம்.
சுழற்பந்துவீச்சு
மற்றொரு காரணம் என்னவென்றால், அவருடைய அசத்தலான சுழற்பந்து வீச்சு தான். அவருடைய பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சென்னை அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சு வரிசையில் சில சிக்கலை எதிர்கொண்டது. அதனைச் சரி செய்யவேண்டும் என்றால் அந்த இடத்துக்கு அஸ்வின் சரியாக இருப்பார்.
ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் மற்றும் மொயீன் அலி போன்ற பெரிய பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் 2025 க்கு செல்லும்போது, மொயீன் அலி அல்லது சான்ட்னரை தக்கவைத்துக்கொள்வது சந்தேகம் தான. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அஷ்வினை விடுவித்தால், சிஎஸ்கே அவரை குறிவைக்கும் வாய்ப்புகள் வலுவாகிவிடும்.
பேட்டிங் பலம்
அஸ்வின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதைப்போல, அவர் சிறந்த ஆல் -ரவுண்டர் கூட, எனவே, அவரைப்போல ஒருவர் சென்னை அணியிலிருந்தால் கண்டிப்பாக அணியின் பேட்டிங்குக்கும் பக்க பலமாக இருக்கும். அவருடைய ஐபிஎல் போட்டியின் புள்ளி விவரத்தை வைத்துப் பார்க்கையில், இதுவரை 211 ஆட்டங்களில், அவர் 800 ரன்களை அடித்துள்ளார். எனவே, இந்த காரணங்களை வைத்துத் தான் சென்னை அணி அவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தங்களுடைய அணிக்கு ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.