ஐபிஎல் 2025 : ‘ஏலத்தின் விதிகளை மாற்றுங்கள்’ ! பிசிசிஐக்கு கடிதம் எழுதிய உரிமையாளர்கள்?
ஐபிஎல் ஏலத்தில் வெளியான ஆர்டிஎம் விதிகளை மாற்றும்படி ஒருசில ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்த ஆர்டிஎம் (RTM – Right to Match) விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என பிசிசிஐக்கு கடிதம் எழுதிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
Read More : ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
அதில், குறிப்பாக ஆர்டிஎம் விதியை பார்த்தோமானால், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த 6 வீரர்களை தக்க வைக்காமல் குறைந்த வீரர்களை தக்க வைத்து கொண்டால், அதற்கு ஏற்றவாறு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என அந்த விதியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இதில் ஒரு சின்ன ஸ்வாரஸ்யமான விஷயத்தையும் அந்த விதியில் புகுத்தி இருந்தனர். “ஏற்கனவே ஒரு அணியில் விளையாடிய வீரர்களை ஏலத்தில் மீண்டும் வாங்க விரும்பும் அணிகள் ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்தி எந்த தொகைக்கு அந்த வீரரை ஒப்பந்தம் செய்துள்ளனரோ அதே விலைக்கு அந்த அணி அந்த வீரரை வாங்கிக் கொள்ளலாம்” என்பது இதற்கு முன்னர் இருந்த ஆர்டிஎம் விதியாகும்.
ஆனால், தற்போது நடைபெற உள்ள மெகா ஏலத்தில், ஒரு வீரருக்கு அதிக தொகை கொடுக்க முன் வரும் அணிக்கு ஒரு வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என்பது தான் புதிய மாற்றமாகும்.
அதாவது, ‘பெங்களூரு அணியில் விளையாடிய ஒரு வீரரை ஏலத்தில் எடுப்பதற்கு மும்பை அணியும், டெல்லி அணியும் போட்டியிட்டு இறுதியில் மும்பை அணி ஒரு தொகைக்கு அந்த வீரரை தீர்மானம் செய்தால், பெங்களூரு அணிஅப்போது ஆர்டிஎம் பயன்படுத்த வேண்டுமென்றால் மும்பை அணி பேசியுள்ள அந்த தொகையை விட அதிக தொகை கொடுக்க பெங்களூரு அணி தயாரானால் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி வீரரை தக்கவைத்து கொள்ளலாம்’, என்பது தான் புதிய விதியாகும்.
இந்த விதிகளுக்கு எதிராக தான் தற்போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும, சில அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிசிசிஐ ஆர்டிஎம் விதிகளை எந்த வகையிலும் மாற்றுவதற்கு தயாராக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.