ஐபிஎல் 2025 : கையில 110 கோடி …அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி ஐடன் மார்க்ராம், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
இந்த சூழலில், அணியின் கேப்டனாக விளையாடி வந்த ஷிகர் தவானையும் அணி தக்க வைக்கவில்லை என்பதால் யார் பஞ்சாப் அணியின் அடுத்த கேப்டன் எந்த வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதனையடுத்து, பஞ்சாப் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 வீரர்களை கேப்டனாக தங்களுடைய அணிக்குத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்தெந்த வீரர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஷ்ரேயாஸ் ஐயர்
கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை தன்னுடைய பெயரைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டாம் எனக் கூறி அவரே அணியிலிருந்து விலகி இருந்தார். அவருடைய கேப்டன்சி எந்த அளவுக்கு அருமையாக இருக்கும் என்பதைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடி கோப்பையை வாங்கி கொடுத்தார். எனவே, இந்த முறை அவரை ஏலத்தில் எடுக்கப் பல அணிகள் போட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், பஞ்சாப் அணி அதிக கோடி செலவு செய்து ஷ்ரேயாஸ் ஐயரை தங்களுடைய அணியில் ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது . அவரை போன்ற ஒரு வீரர் தங்களுடைய அணிக்கு விளையாடினாள் பேட்டிங்கிலும், கேப்டன் சியிலும் ஒரு வலுவான பாதையாக அணிக்கு இருக்கும் என்பதால் பஞ்சாப் அணி முதல் ஆளாக ஷ்ரேயாஸ் ஐயரைக் குறிவைத்துள்ளது.
ரிஷப் பண்ட்
டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட்டை இந்த முறை அணி தக்க வைக்காத நிலையில், அவரை இந்த முறை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் 2021, 2022 மற்றும் 2024 இல் அவர் டெல்லி அணியை வழிநடத்தினார். இதுவரை 43 போட்டிகளை வழிநடத்திய அவருடைய கேப்டன்சியில் டெல்லி அணி 23 முறை வெற்றிபெற்றுள்ளது. அவருக்கு கேப்டன் அனுபவம் உள்ள காரணத்தால் அவர் பஞ்சாப் அணியை வழிநடத்தினால் சரியாக இருக்கும் என அவருக்கும் பஞ்சாப் அணி குறி வைத்துள்ளது.
ஐடன் மார்க்ராம்
ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஐடன் மார்க்ராம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அணியை வழிநடத்தினார். ஆனால், அவருடைய கேப்டன்சி பேசும்படி அளவுக்குச் சிறப்பாக இல்லை. 14 போட்டிகளில் 10 போட்டிகள் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ்க்கு வழங்கப்பட்டது. இருப்பினும், ஐடன் மார்க்ராம் கேப்டன்சி அனுபவமும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தி இருக்கிறார்.
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு புரோட்டீஸை வழிநடத்திய முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்து இருக்கிறார்.எனவே, இவருக்கு கேப்டன் சி அனுபவம் உள்ளதால் அவரை ஏலத்தில் எடுக்கப் பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.