2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!
2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து அக்.1ல் கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் பலமுறை கூறியிருந்தார்.
அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தொடக்க விழாவில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இந்தியா தனது விருப்பத்தை தெரிவித்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியிருந்தது. அதன்படி, ஐஓஏ இப்போது இது தொடர்பாக தனது விருப்பத்தை தெரிவித்து அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.
2032 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இடங்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் 2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நடத்தும். 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இதுவரை இந்தியாவில் நடைபெற்ற முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 1982 ஆசிய விளையாட்டு மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டு ஆகும்.