இரவு முழுவதும் தீவிர பயிற்சி ..! வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி !!
பாரிஸ் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் தொடரான ஒலிம்பிக் தொடரானது தற்போது பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கி எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இவர் நேற்று 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் ஜப்பானை சேர்ந்த வீராங்கணையான யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் இதுவரை 3 வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இன்றைய நாள் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாக கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், இன்றைய நாளில் இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்கான உடற்தகுதி சோதனையில் 100 கிராம் அதிகம் உள்ளதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அமெரிக்க வீராங்கணை சாராவிற்கு தங்க பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பல கோடி இந்தியர்களின் பதக்க கனவும் நொறுங்கி இருக்கிறது. மேலும், இந்த இறுதி போட்டிக்காக தனது உடல் எடையை குறைப்பதற்காகவே நேற்று இரவு முழுவதும் விடாமல் உடற்பயிற்சிகள் செய்து 1.80 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
தற்போது, நீர்சத்து குறைபாடு மற்றும் இரவு முழுவதும் விடாமல் பயிற்சி என உடல் கோளாறு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வினேஷ் போகத். தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் மல்யுத்த போட்டிகளில் அவர் சந்தித்த அளவிற்கு துன்பங்கள் எந்த வீரர் மற்றும் வீராங்கனைகளும் சந்தித்திருப்பது சந்தேகம் தான்.
தற்போது, பல இன்னல்களை தாண்டி இறுதி போட்டியில் நுழைந்த போதும் கூட உடல் எடை கூடியதன் காரணமாக இறுதி கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவால் எந்த ஒரு மேல்முறையீடும் செய்ய முடியாதென்று தகவலும் வெளியாகி உள்ளது. இது கோடி கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் நொறுக்கி இருக்கிறது என்றே கூறலாம்.