INDvsNZ : ஸ்மிருதி மந்தனா அதிரடி! தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்றது.
முன்னதாக இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இந்த தொடரில் இரண்டு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தனர். எனவே, கடைசி போட்டியில் விளையாடி வெற்றிபெற்றால் மட்டும் தான் இந்த ஒரு நாள் தொடரில் வெற்றிபெறமுடியும் என்ற முனைப்போடு இரண்டு அணிகளும் களம் கண்டது.
அதன்படி, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அணியில் புரூக் ஹாலிடே 86 ரன்களையும், ஜார்ஜியா ப்ளிம்மர் 39 ரன்களையும் எடுத்திருந்தனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் திப்தி ஷர்மா 3 விக்கெட்களையும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். மேலும், நியூசிலாந்து அணி 232 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி (100) ஆட்டமிழந்தார். இவருடைய அதிரடியான இந்த ஆட்டம் காரணமாகத் தான் இந்திய அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.
அதாவது, 44.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரையும் வென்றது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வெளியேறியே பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்று இருக்கிறது.