INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!
முதல் நாள் ஆட்டத்தில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை பந்துவீச அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில், 49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்தது.
தொடக்கத்திலே தடுமாறிய காரணத்தால் இந்திய அணியால் தங்களுடைய முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் 37,கே.எல்.ராகுல் 26, நிதிஷ் ரெட்டி 41, ரன்கள் எடுத்தனர். இந்திய அணி இப்படியான குறைவான ரன்களில் ஆட்டமிழக்க முக்கிய காரணமே ஆஸ்ரேலியா அணியின் மிரட்டல் பந்துவீச்சு தான் காரணம்.
ஆஸ்ரேலியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 4, கம்மின்ஸ் (சி) 2, மிட்செல் மார்ஷ் 2, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் எடுத்தனர். ஆஸ்ரேலியா அணி தங்களுடைய பந்துவீச்சில் இந்தியாவை சுருட்டியது போல இந்திய அணியும் நாங்கள் என்ன சும்மாவா? என்கிற வகையில், அசத்தலாக பந்துவீசி ஆஸ்ரேலியா அணியை சுருட்டியுள்ளது.
ஆஸ்ரேலியா அணியும் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியதில் இருந்தே தடுமாற்றத்துடன் தான் விளையாடி வந்தது. முதல் நாள் முடிவில் 27.ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணியை விட ஆஸ்ரேலியா 83 ரன்கள் பின் தங்கியுள்ளது. நாளை காலை 9 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.
இந்திய அணியில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களையும், முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.