டோக்கியோ ஒலிம்பிக்: விமானத்தை தவறவிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்…!
இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் பிராங்க்ஃபர்ட்டில் இருந்து டோக்கியோவிற்கு செல்லும் விமானத்தை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரும், இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கை வீராங்கனைகளில் ஒருவருமான வினேஷ் போகட்,ஒலிம்பிக் விளையாட்டுக்கு முன்னதாக தனது பயிற்சியாளர் வோலர் அகோஸுடன் ஹங்கேரியில் பயிற்சி பெற்று வருகிறார்.நேற்று இரவு டோக்கியோவை அடைய இருந்தார்.ஆனால் டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர் பிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால்,வினேஷ் போகட் நேற்று பிராங்பஃர்ட்டிலிருந்து டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தைத் தவறவிட்டார்.பி.டி.ஐ படி, அவர் தனது ஐரோப்பிய ஒன்றிய (ஈ.யூ) விசாவின் மூலம் ஹங்கேரியில் ஒரு நாள் அதிகமாக தங்கியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்,இது தொடர்பாக,இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் (ஐஓஏ) அதிகாரி கூறுகையில்:
“இது ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்யப்படவில்லை.அவரது ஷெங்கன் விசாவின் படி 90 நாட்களுக்கு பதிலாக, அவர் புடாபெஸ்டில் இருந்து பிராங்பேர்ட்டில் தரையிறங்கிய பின்னர் 91 நாட்கள் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தார் என்று கணக்கிடப்பட்டது.இந்த விஷயத்தை இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ) விரைவாக எடுத்துக் கொண்டது.மேலும்,பிராங்பேர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகம் விமான நிலையத்தை அடைந்து சிக்கலை சரி செய்தது. இதனால், வினேஷ் நாளை டோக்கியோவில் இருப்பார்”,என்று தெரிவித்தார்.
அதன்படி,வினேஷ் போகாட் தற்போது டோக்கியோவில் தரையிறங்கவுள்ளார்.இதனையடுத்து,டோக்கியோ ஒலிம்பிக் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் பங்கேற்கவுள்ளார்.
26 வயதான,வினேஷ் போகட் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் ஆவார் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.