உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய மகளிர் அணி! கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
இந்திய மகளிர் அணியில் கேப்டனை மாற்றுவது குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு தலைமைப் பயிற்சியாளருடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .குரூப் கட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதிய போட்டியில் தோல்வியற்ற பிறகு இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை தவறிவிட்டது.
இந்த சூழலில், இந்திய அணி அடுத்ததாக வரும் தொடர்களில் தற்போதைய கேப்டனாக இருக்கும் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக அணியை வழி நடத்திச் செல்ல சரியானவராக இருப்பாரா? அல்லது வேறு வீராங்கனையை கேப்டனாக நியமிக்கலாமா? என்பது குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு மற்றும் தலைமைப் பயிற்சியாளருடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த WPL தொடரின் போட்டிகளில் மும்பை இந்தியன் அணியைச் சிறப்பாக வழிநடத்தி சென்ற காரணத்தால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதிவு ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்டது. ஆனால், முக்கியமான இந்த தொடரில் இந்திய அணி விரைவாகவே வெளியேறிய காரணத்தால் கேப்டனை மாற்றும் முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் குறித்து பிசிசிஐ நெருங்கிய வட்டாரத்திலிருந்த ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்குத் தகவலும் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது” இந்திய அணியில் புதிய கேப்டனை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் தொடர்ந்து அணியின் முக்கிய உறுப்பினராக இருப்பார், ஆனால், கேப்டன் மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, பிசிசிஐ தேர்வுக் குழு மற்றும் தலைமைப் பயிற்சியாளருடன் விரைவில் பேசி யார் கேப்டனாக இருப்பார் என்பது பற்றித் தேர்வு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.