ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

HockeyIndia

13வது ஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியானது, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, கனடா, கொரியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் மலேசியா அணியும், B பிரிவில் எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணியும். C பிரிவில் கனடா, இந்தியா, கொரியா, ஸ்பெயின் அணியும், D பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.

டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் கொரியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, 7ம் தேதி ஸ்பெயின் அணியையும், ஒன்பதாம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது. காலிறுதிப் போட்டிகள் டிசம்பர் 12ஆம் தேதியும், அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 14ஆம் தேதியும், இறுதிப் போட்டி டிசம்பர் 16ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த நிலையில் எஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை 2023 க்கான இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. இதில் இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக உத்தம் சிங்கும், ஆரைஜீத் சிங் ஹண்டால் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கோல்கீப்பர்களாக மோஹித் எச்.எஸ், ரன்விஜய் சிங் யாதவ் உள்ளனர். டிஃபெண்டர்களாக ஷர்தானந்த் திவாரி, அமந்தீப் லக்ரா, ரோஹித், சுனில் ஜோஜோ, அமீர் அலி ஆகியோரும், மிட்பீல்டர்களாக விஷ்ணுகாந்த் சிங், பூவண்ணா சிபி, ராஜிந்தர் சிங், அமந்தீப், ஆதித்யா சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், ஃபார்வேர்டு வீரர்களாக உத்தம் சிங், ஆதித்யா லாலாகே, ஆரைஜீத் சிங் ஹண்டால், சௌரப் ஆனந்த் குஷ்வாஹா, சுதீப் சிர்மகோ, போபி சிங் தாமி ஆகியோரும், மாற்று வீரர்களாக சுக்விந்தர், சுனித் லக்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய சீசனில் இந்தியா வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டு, நான்காவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்