காலை இழந்த இந்திய ராணுவ வீரர் ஹோகாடோ! வெண்கல பதக்கம் வென்று அசத்தல்!
இந்தியாவின் ராணுவ வீரராக பணியாற்றிய ஹோகாடோ ஹோடோஷே நடைபெறும் பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் பாரா தடகளத்தில் ஷாட் புட் பிரிவில் இந்திய அணியின் சார்பாக ஹோகாடோ ஹோடோஷே செமா பங்கேற்று விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்து இருக்கிறார்.
வெண்கல பதக்கம் வென்ற ஹோகாடோ ஹோடோஷே நாகாலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். சாதாரண விவசாயின் மகனாகப் பிறந்த இவர் சிறு வயது முதலே ராணுவத்தின் மீது காதல் கொண்டவர் ஆவார். அதற்காகவே தன்னை சிறு வயது முதலே தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதன் பின் இந்திய ராணுவத்திலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இந்திய ராணுவத்தில் உடல் வலிமைக்கும், மன உறுதிக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார் ஹோகாடோ. அதன் பின் கடந்த 2002 -ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி அன்று நடந்த ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணி வெடி ஒன்றில் காலை வைத்து விபத்தில் சிக்கினார்.
அந்த விபத்தில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இடது காலில் முட்டிக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த சம்பத்தைத் தொடர்ந்து அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அதன் பின் தனது 32 வயதில் ஷாட்-புட் விளையாட்டைத் தேர்வு செய்து விளையாடி வந்தார்.
பாரா ஷாட் புட்டில் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு பயிற்சி மேற்கொண்ட அவர் முதன்முறையாக இந்த பாராலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த பாராலிம்பிக் தொடரில் ஷாட் புட் விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோகாடோ ஹோடோஷே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
மேலும், இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இவர் 14.65 மீட்டர் தூரம் வரை குண்டை எரிந்து 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப்பாதகத்தை சாதனை படைத்தார். இவர் வென்ற இந்த வெண்கலப்பாதகம் பாராலிம்பிக் 2024-ல் இந்திய அணி வென்ற 27-வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.