ஆர்மேனிய செஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் அர்ஜுன்..!
ஆர்மேனிய செஸ்: ஆர்மேனிய செஸ் தொடரில் இந்திய செஸ் வீரரான அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆர்மேனியாவில் இந்த ஆண்டிற்கான ஸ்டீபன் அவக்யான் சர்வதேச செஸ் தொடரானது நடைபெற்று வந்தது. இந்த செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட மொத்தம் 10 செஸ் வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் -வது சுற்று முடிவில் 3 வெற்றி, 4 ட்ரா பெற்றிருந்த அர்ஜுன் 8-வது சுற்றில் ரஷ்யாவின் செஸ் மாஸ்டரான வோலோடெர் மர்ஜினை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த 8-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 40 நகர்வில் வரை சமநிலையில் நீடித்தார். அதனை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர், 63-வது நகர்த்தலில் வெற்றியை உறுதி செய்தார். அதன் பிறகு 9-வது மற்றும் கடைசி சுற்றில் அர்ஜுன் எரிகைசி ஆர்மேனியா நாட்டை சேர்ந்த மானுயலை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியும் கடுமையாக சென்றது இருப்பினும் இறுதியில் ட்ரா ஆனது. இதன் மூலம் 9 சுற்றுகள் விளையாடி 4 வெற்றி பெற்று, 5 ட்ராவுடன் ஒரு தோல்வியை கூட பெறாமல் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதனால், இந்த தொடரையும் கைப்பற்றி இந்த ஆண்டின் ஆர்மேனிய செஸ் தொடரின் சாம்பியனும் ஆனார்.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜுன் எரிகைசி, லைவ் ரேட்டிங்கில் 2,778 புள்ளிகளுடன் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து இந்தியர்களாக உலக தரவரிசையில் டி.குகேஷ் 2,763 புள்ளிகளுடன் 7-ம் இடத்திலும், ஆர்.பிரக்ஞானந்தா 2,757 புள்ளிகளுடன் 8-ம் இடத்திலும் இருந்து வருகின்றனர்.