ஆசிய விளையாட்டில் முதல் முறையாக 100 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.!

19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 13 வது நாளாக நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்தவகையில், தற்போது வரை 91 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இன்னும் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த பிரிவில் சோனம் மாலிக் வெண்கலம் வென்று இந்தியாவின் 91 வது பதக்கத்தைப் பதிவு செய்தார். 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம் என வென்ற 91 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, மீதமுள்ள போட்டிகளில் மேலும் ஒன்பது பதக்கங்களை வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணியானது 1 பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அதே போல, வில்வித்தையில் மூன்று போட்டிகளில் பிரவின் டியோடேல், அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதனால் வில்வித்தையில் 3 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
கபடி போட்டியிலும் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 2 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. பேட்மின்டனில் இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவினரான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறி 1 பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
அதேபோல, கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 1 பதக்கத்தையும், பிரிட்ஜ் போட்டியிலும் இந்திய ஆண்கள் அணி ஒரு பதக்கத்தையும் உறுதி செய்துள்ளனர். இவ்வாறு மொத்தமாக 9 பதக்கங்களை உறுதி செய்த நிலையில், இந்தியா 19 ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது.
முன்னதாக 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றது. அந்த எண்ணிக்கையை, தற்போதைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி 71 பதக்கங்களை எடுத்த நிலையில், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் எடுத்த 70 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை கடந்து சென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.