வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி.. இங்கிலாந்தை 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை..!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் 68, ஹர்மன்பிரீத் கவுர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் லாரன் பெல் , எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
இதைதொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா வீசிய 5.3 ஓவரில் 4 ஓவரை மெய்டன் செய்து 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டை பறித்தார். இதனையடுத்து 292 ரன்கள் முன்னிலை உடன் தனது 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. 42 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 478 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸை போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 347 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது இன்னிங்ஸில் திப்தி சர்மா 4 விக்கெட்டையும், பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டையும் , ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டையும் பறித்தனர். தீப்தி சர்மா வீசிய 8 ஓவரில் 2 ஓவர் மெய்டன் செய்து 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
தீப்தி ஷர்மா இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 39 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் பறித்துள்ளார். அதேபோல பேட்டிங்கில் 87 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இந்த போட்டிக்கான சிறந்த வீரர் விருதை வாங்கியுள்ளார். இந்த வெற்றி மூலம் பெண்கள் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
பெண்கள் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்:
2023-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
1998- ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
1972- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
1949-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
1949-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.