IND-WvsWI-W : பூஜா, ஜெமிமா அதிரடி! 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபாரம்!
நேற்று நடைபெற்ற டி20 வார்ம்-அப் போட்டியில் இந்திய மகளீர் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடி வெற்றிப் பெற்றுள்ளது.
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த தொடருக்கு முன்னதாக வார்ம்-அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று இந்திய மகளீர் அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணிக்கும் வார்ம்-அப் போட்டியானது நடைபெற்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய மகளீர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்களான ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைக்க தவறினார்கள்.
இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்மான்ப்ரீத்தும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மேலும், அடுத்தபடியாக அதிரடி பேட்ஸ்மேன் ஜெமிமா களமிறங்கி அணிக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அவருடன் இணைந்து சக பேட்ஸ்மேன்கள் ரன்ஸ் அடிக்க தவிறினார்கள். இதனால், பொறுப்புடன் விளையாடிய ஜெமிமா அரை சதம் அடித்து அசத்தினார். மேலும், இறுதி கட்டத்தை நெருங்கிய போது அடித்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக 52 ரன்களில் ரன்-அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பிறகு இருந்த 2 ஓவர்களும் இந்திய அணி தட்டி தட்டியே ரன்களைச் சேர்த்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளீர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணியில் ஹேலி மேத்யூஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
இந்திய மகளீர் அணி நிர்ணயித்த இந்த 142 என்ற இலக்கை அடைய வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி பேட்டிங் களமிறங்கியது. இந்திய அணியின் வலுவான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலே 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய விளையாடியது.
ஆனால், ஒருபக்கம் ஷெமைன் காம்பெல்லே நிலைத்து மிகவும் பொறுமையாக விளையாடி வந்தார். அடுத்ததாக அவருடன் கூட்டணி அமைத்த சினெல்லே ஹென்றி ரன்களை மெதுவாக உயர்த்த தொடங்கினார். அவரது நிதான ஆட்டம் இந்திய மகளீர் அணி பவுலர்களுக்கு சற்று சவாலாக அமைந்தது.
ஆனால், தக்க சமையத்தில் வலுவாக சென்ற அந்த கூட்டணி ஷெமைன் விக்கெட் மூலம் கலைந்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றது. இறுதி கட்டத்தில் ரன்கள் அதிகம் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரிகள் விளாச முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி திணறியது.
இருப்பினும், அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணிக்கு அது கைகொடுக்கவும் இல்லை. இறுதியில், 20 ஓவர்களும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 121 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்தியா மகளீர் அணி 20 ரன்கள் விதியசத்தில் இந்த வார்ம்-அப் போட்டியை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 59 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய மகளீர் அணியில் பூஜா வஸ்த்ரகர் தனது சிறப்பான பவுலிங் மூலம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னரே வெற்றியுடன் களமிறங்குவதால், இந்திய மகளீர் அணி இந்த கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.