IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!
நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் செய்த ரன் - அவுட் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த போட்டியில் திடீரென நிகழ்ந்த ஒரு விஷயம் தற்போது பெரிய சர்ச்சையாகவும் மாறியது.
ஏனென்றால் போட்டியில், இந்திய அணி பந்துவீசும்போது, 14வது ஓவரை வீச திப்தி ஷர்மா வந்தார். அப்போது, அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்டிங் செய்த அமெலியா கெர், லாங் ஆஃப் நோக்கி ஷாட் ஒன்றை அடித்து ரன் எடுக்க முயற்சி செய்தார். பந்து ஹர்மன்பிரீத் கைக்கு சென்றதால் ஒரு ரன்எடுத்தால் போதும் என அமெலியா கெர் முடிவெடுத்து மெதுவாக ஓடினார்.
அதைப்போல, ஹர்மன்பிரீத் ஓவர் முடிந்துவிட்டதாக பந்தை தூக்கி எரியாமல் கையில் வைத்துக்கொண்டு மெதுவாக பிட்ச்சை நோக்கி ஓடி வந்தார். இதனைக் கவனித்த நியூசிலாந்து வீராங்கனைகள் இன்னொரு ரன் ஓடிவிடலாம் எனத் திட்டமிட்டு வேகமாக ஓடினார்கள். பிறகு ஹர்மன்பிரீத் பந்தை விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் வீசினார்.
கீப்பர் ரிச்சா கோஷும் பந்தை ஸ்டீம்பில் அடித்து அமெலியா கெர்ரை ரன்-அவுட் செய்தார். உடனடியாக இந்திய வீராங்கனைகள் விக்கெட் எடுத்ததாகக் கொண்டாடிய நிலையில், ரசிகர்களும் கத்தி கரகோஷமிட்டனர். அமெலியா கெர் தனது கை யுரைகளை கழட்டிக்கொண்டு வேகமாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றார். அப்போது தான், இந்திய வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
பெவிலியனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அமெலியா கெரை அவுட் இல்லை திரும்பி விளையாடுங்கள் என்பது போல் நடுவர் கூற மீண்டும் அவர் மைதானத்திற்குள் வந்தார். இதனை கவிந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அதிர்ச்சியுடன் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது நடுவர் அந்த ஓவர் முடிந்துவிட்டதாக நான் அப்போதே கூறிவிட்டேன் என்பது போலப் பேசியதாகத் தெரிகிறது.
Amellia Kerr was out or not out ? #INDvsNZ #T20WorldCup #T20WomensWorldCup #harmanpreetkaur pic.twitter.com/y9PoOA2wSa
— ANUJ THAKKUR (@anuj2488) October 4, 2024
வாக்குவாதம் முடிந்து மீண்டும் பேட்டிங் செய்த அமெலியா கெரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. அதற்கு அடுத்த ஓவர் அதாவது,15 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும், நடுவர் அவுட் கொடுக்காத காரணத்தால், இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக மாறி சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எழுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வளைத்தள பக்கங்களில் ” இரண்டாவது ரன் தொடங்குவதற்கு முன்பு ஓவர் அழைக்கப்பட்டது. இது உண்மையில் யாருடைய தவறு? ” எனத் தெரிவித்துள்ளார். பிறகு அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.