IND vs SA : வெற்றியைத் தொடருமா இந்திய அணி? இன்று 2வது டி20 போட்டி!
இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று செயின்ட் ஜார்ஜ்ஜில் நடைபெற இருக்கிறது.
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்று வருகிறது.
இந்த தொடரில், 2வது டி20 போட்டியானது இன்று செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த முதல் போட்டியில், இந்திய அணியின் வீரரான சஞ்சு சாம்சன் அதிரடியாகச் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
மேலும், இன்றைய போட்டியில் அவர் மீண்டும் சதம் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். இந்திய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் டி20 போட்டிகளில் இது வரை நேருக்கு நேராக 28 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர்.
அதில், இந்திய அணி 16 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும், 1 போட்டி முடிவில்லாமலும் இருக்கிறது. இதனால், இன்றைய போட்டியிலும் இந்திய அணியே வெற்றிபெறும் என இந்திய அணி ரசிகர்கள் கருதப்படுகிறது.
ஆனால் மறுபக்கம், இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அதன்பிறகு நடைபெற்று வரும் இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.
இதன் காரணமாக இந்த தொடர் தோல்விக்குப் பதிலடியாக தென்னாப்பிரிக்க அணி திரும்பி வரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகள் நெருங்கவிருக்கும் நிலையில் அந்த அணியின் முக்கிய வீரர்களான க்ளாஸென், ஸ்டப்ஸ், மார்க்ரம் உள்ளிட்ட வீரர்களிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் அவற்றைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு வலுவான போட்டி அமைப்பார்கள் எனவும் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.