IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது.
இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு இளம் அணியுடன் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியது.
இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச வீரர்கள் பேட்டிங் களமிறங்கினர்கள். இளம் பவுலிங் படையுடன் பந்து வீச வந்த இந்திய அணி, வங்கதேச பேட்ஸ்மேன்களை ரன்கள் எடுக்கவிடாமல் விக்கெட்டை எடுக்கத் தொடங்கினார்கள்.
குறிப்பாக, அர்சதீப் சிங், வருண் சக்கரவர்த்தி, மாயங் யாதவ் பவர்பிளேவை இந்திய அணியின் கட்டுக்குள் வைத்திருந்தனர். அதன்படி, வங்கதேச அதிரடி வீரர்களான பர்வேஸ் ஹொசைன் எமன் , லிட்டன் தாஸ் (வாரம்) , சாண்டோ , ஹ்ரிடோய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும், அதன் பிறகு களமிறங்கிய மெஹிதி ஹசன் சிறுது நேரம் நிலைத்து விளையாடினார். ஆனாலும், வங்கதேச அணிக்கு அது பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால், இறுதியில் 19.5 ஓவர்களில் வங்கதேச அணி தனது 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்படி, 127 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்கள். இந்திய அணியின் பவுலிங் படையில் அர்ஷதீப் சிங்கும் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.
அதன்பின், 128 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, தொடக்கத்தையே அதிரடியாகவே இந்திய அணி அமைத்தது. களமிறங்கிய வீரர்களான அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் வங்கதேச அணியின் பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரிக்கு சிதறடித்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பின் களமிறங்கிய சூரியகுமார் யாதவ், களமிறங்கியவுடனேயே அதிரடி காட்டினார். அவர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருக்கு பின் களத்தில் நிதிஷ் ராணாவும், ஹர்திக் பாண்டியவும் 4-வது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடினார்கள். இறுதி வரை, இருவரும் விக்கெட்டை கொடுக்காமல் வங்கதேச பவுலர்களுக்கு சவாலாக மாறினார்கள்.
இதனால், 11.5 ஓவர்களிலயே 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய, ஹர்திக் பாண்டியா 16 பந்துக்கு 39* ரன்கள் விளாசி இருந்தார். அதில் 2 சிக்ஸர் உட்பட 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதனால், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரின் அடுத்த டி20 போட்டியானது வரும் அக்-9ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது.