“நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” ! உடற்தகுதி குறித்து மனம் திறந்த முகமது ஷமி!
முழு உடற்தகுதியை பெற்ற பிறகே இந்திய அணிக்கு திரும்புவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் முகமது ஷமி சிறப்பாக விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து காலில் ஏற்பட்ட அந்த காயத்திற்கு அறுவை சிகிச்சையும் அவர் மேற்கொண்டார். அதன் பின் நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் பந்து வீச்சு பயிற்சியில் இறங்கினார். அந்த வீடியோ அப்போது வைரலாக பரவி வந்தது. மேலும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமாக இருப்பதையும் அப்போது தெரிவித்தார்.
அதே நேரம் ஒரு பக்கம் பந்து வீச்சு பயிற்சி செய்தாலும் மறு பக்கம் அவர் தனது உடலையும் கவனமாக பார்த்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷமி அவர் உடற்தகுதியும் குறித்தும், இந்திய அணிக்காக அவர் விளையாடும் ஆர்வத்தைக் குறித்தும் பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “நீண்ட நாட்களாக நான் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி இருக்கிறேன். எனது உடற் தகுதியை பொறுத்தே நான் இப்போது இயங்கி வருகிறேன். எந்த வித குழப்பமும் இல்லாமல் அணிக்குள் வர விரும்புகிறேன். நான் வலுவாக வருவதே அணிக்கு சிறந்தது.
அப்போது தான் எனக்குக் காயம் சார்ந்த எந்த பயமும் இருக்காது. அதனால் நான் ரிஸ்க் எடுத்து விளையாட விரும்பவில்லை. நான் 100% சதவீத உடற்தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். அதன் பிறகே நான் அணிக்கு திரும்புவேன். தற்போது, நான் பந்து வீச தொடங்கி இருக்கிறேன். காயம் குறித்த எந்த பயமும் இல்லாமல் விளையாட முடிவு செய்துள்ளேன்.
அதனால், நான் எந்த ஃபார்மெட்டில் விளையாடுகிறேன் என்பது முக்கியம் கிடையாது. வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்கள் எல்லாம் இதில் அடங்கும். அதே நேரம் நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவும் வாய்ப்பு உள்ளது”, என முகமது ஷமி கூறியுள்ளார்.