ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றது. இதில், இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்திய அணி தென்கொரியா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், போட்டியின் 13-வது நிமிடத்தில் உத்தம் சிங் முதல் கோலை அடித்து அசத்தினார்.
அதன் பிறகு, ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் அட்டகாசமான 2-வது கோலை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியா அணி போராடினாலும் கோல் அடிக்க முடியவில்லை. மேலும், 32-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக ஜர்மன் ப்ரீத் சிங் 3-வது கோலை பதிவு செய்தார்.
அப்போது அடுத்த நிமிடமே இதற்கு பதிலடியாக தென் கொரிய வீரரான ஜிஹூன் யங் அணிக்கான முதல் கோலை அடித்தார். வேகமாக முதல் கோலை அடித்ததால் தொடர்ந்து அடுத்தடுத்து கோல்கள் தென்கொரிய அணி அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய அணியின் அட்டகாசமான டீஃபென்ஸால் தென் கொரியா அணியால் ஒரு கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. மேலும், அதிலிருந்து இந்திய வீரரான ஹர்மன்ப்ரீத் சிங் அவரது 2-வது மற்றும் அணியின் 4-வது கோலை அடித்து அசத்தினார்.
இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-1 என தென்கொரிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், நாளை (செப்டம்பர்-17) இந்திய அணி சீன அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.