ரொனால்டோவுக்கு அடுத்தது இவர் தான்! பலோன் டி’ஓர் விருதை வென்றார் மன்செஸ்டர் சிட்டி ரோட்ரி!
2023-24 ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை மஞ்செஸ்டர் சிட்டி அணியின் மிட்-பீல்டரான ரோட்ரி வென்று அசத்தியுள்ளார்.
பாரிஸ் : கால்பந்து உலகத்தில் மிகப்பெரிய விருதாகக் கருதப்படுவது பலோன் டி’ஓர் விருது தான். கால்பந்து ஜாம்பவங்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் தான் கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை இந்த விருதை வென்றுள்ளனர்.
இப்படி இருவருக்கும் இடையே தான் மிகப்பெரிய போட்டி இந்த விருதுக்காக இருந்து வந்தது. தற்போது, மெஸ்ஸி அமெரிக்கா கால்பந்து தொடரிலும், ரொனால்டோ சவூதி கால்பந்து தொடரிலும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த 2023-24 ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மன்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர மிட்-பீல்டர் வீரரான ரோட்ரி வென்று அசத்தியுள்ளார்.
கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை வெல்வதற்கும், சமீபத்தில் நடைபெற்ற 2024 ஆண்டுக்கான யூரோ கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியான காரணமாய் அமைந்தவர் தான் ரோட்ரி.
இவரது இந்த சிறப்பான விளையாட்டால், பலோன் டி’ஓர் விருதை முதல் முறை பெற்றுள்ளார். இதன் மூலம், ஒரு இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ஒரு வீரர் அதுவும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு பிறகு பலோன் டி’ஓர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2008-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முதல் முறை ரொனால்டோ பலோன் டி’ஓர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.