‘சாதித்த தமிழன்’! ஹாட்ரிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவின் பேசப்படும் சாதனை!
பாராலிம்பிக் போட்டியில் தமிழக தடகள வீரரான தங்கவேலு மாரியப்பனின் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை : பிரான்ஸ் நகரின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய தமிழக வீரரான தங்கவேலு மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும், தொடர்ச்சியாக 3 முறை பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், முதல் முறையாக தொடர்ச்சியாக ஹாட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு :
சேலம் மாவட்டத்தில் பெரியவடக்கம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தங்கவேலு மற்றும் சரோஜா ஆகியோரின் மூத்த மகன் தான் மாரியப்பன். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தனது 5 வயதில் பள்ளிக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானார். இதில் அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழ் முற்றிலும் சேதமானது, சொல்லப்போனால் அவரது வலது முழங்காலுக்கு கீழ் இழக்க நேர்ந்தது.
இந்த சோகம் ஒரு புறம் இருக்க சிறு வயதிலே அவரது தந்தை தங்கவேலுவும் குடும்பத்தை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஒற்றை ஆளாக காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலைகள் செய்தும் தனது குழந்தைகளை மாரியப்பனின் அம்மாவான சரோஜா வளர்த்து வந்துள்ளார்.
மாரியப்பன், தனது வலது காலை இழந்தாலும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் முதலில் வாலிபால் போட்டியில் கவனம் செலுத்தி வந்தார். அதன் பின், அவரது உடற்கல்வி ஆசிரியர் அவரது திறமையை சரியாக கணித்து உயரம் தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்துமாறு கூறினார்.
கடந்து வந்த பாதை ..!
மேலும், மாரியப்பன் விளையாட்டு மற்றும் படிப்பு என ஒரு புறம் அதில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபுறம் தனது குடும்பத்திற்காக தினமும் செய்தி தாள்கள் போடும் வேலையையும், விடுமுறை நாட்களில் கட்டுமான பணிகளையும் செய்து வந்தார்.
அதன் பிறகு முதல் முறையாக உயரம் தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் தன் வாழ்நாளில் முதல் பதக்கத்தை வென்றார்.
அங்கு சூடு பிடித்த அவரது தடகள வாழ்க்கை நிற்காமல் ஒரு உடைந்த அணை நிற்காமல் ஓடுவது போல வெற்றிகளை முத்தமிட்டார் என்றே கூறலாம். கடந்த 2013 -ம் ஆண்டில் பயிற்சியாளர் சத்யநாராயணனை சந்தித்து பயிற்சிகளை மேற்கொண்டார்.
மாரியப்பனின் தனித்துவமான திறமையை கண்டறிந்த சத்யநாராயணன் அவருக்கு தீவிர பயிற்சியை அளித்து உலகின் தலை சிறந்த வீரராக மாற்றினார். மேலும், அனைத்து மாற்று திறனாளிகளுக்கான போட்டிகளிலும் அவரை கலந்துக்க செய்து அதில் வெற்றிகளையும் குவிக்க செய்து மேற்கொண்டு அவரை செதுக்கி அழகு பார்த்தார்.
வெற்றிகளும், பதக்கங்களும்!
- தனது 14 வயதில், முதல் முறையாக உயரம் தாண்டுதல் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன் 2-ஆம் இடம் பிடித்து அசத்தினார்.
- 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில் 1.78 மீ உயரம் தாண்டி முதல் முறையாக தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.
- 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய மாரியப்பன் 1.86 மீ உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.
- 2024- ம் ஆண்டு தற்போது நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் விளையாடிய மாரியப்பன் 1.85 மீ வரை உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார்.
விருதுகள் :
- மாரியப்பனுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை பாராட்டும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனன் விருதுகள் வழங்கப்பட்டது.
- கடந்த 2020-ம் ஆண்டு மாரியப்பனுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்ப்பட்டது.
- விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பை கைவிடாத மாரியப்பன் ‘பிஸ்னஸ் அட்மினிஸ்டரேஷன்’ படிப்பில் இளங்கலை பட்டமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு, படிப்பு அத்தனையும் தாண்டி இயலாத படிக்கும் மாணவர்கள், தன்னால் முடிந்த உதவிகளையும் மாரியப்பன் செய்து வருகிறார். விபத்தில் தனது காலை அவர் இழந்த போதிலும் கூட மனதளவில் சிறிதளவும் தளராத மாரியப்பன் பல சாதனைகளை புரிந்து வருகிறார்.
மேலும், விளையாட்டு துறையிலும் குறிப்பாக தடகள போட்டிகளை கனவாக வைத்திருக்கும் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவே மாறி இருக்கிறார். பாராலிம்பிக் தொடரில் 3 பதக்கங்களை வென்ற மாரியப்பனுக்கு தற்போது நாடு முழுவதும் உள்ள மக்கள் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.