யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்! ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசிய ஹர்திக் பாண்டியா!
சையத் முஷ்டாக் அலி தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6, 6, 6, 4, 6.. 28 ரன்கள் விளாசி அதிரடியான ஆட்டத்தை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தோர் : இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். க்ருனால் பாண்டியா தலைமையிலான இந்த அணி நேற்று திரிபுரா அணியுடன் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை பறிகொடுத்தது. அதன்பிறகு களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியா மதியம் நேரத்தில் வாணவேடிக்கை பார்க்கிறீர்களா? என்பது போல பந்துகளை சிக்ஸர் விளாச தொடங்கினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றிப்பாதைக்க்கும் எடுத்து சென்றார்.
இந்த போட்டியில் ரசிகர்கள் கண்டுகளித்த ஓவர் என்றால் 10-வது ஓவர் தான். ஏனென்றால், இந்த ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் சுல்தான் வீசிய பந்தை நாளா பக்கமும் அடித்து சிதறவிட்டார். இந்த ஓவரில் மட்டும் ( 6, 0, 6, 6, 4, 6) ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்ததைத் தவிர முதல், மூன்றாவது, நான்காவது மற்றும் ஆறாவது பந்துகளில் சிக்ஸரை விளாசினார்.
11-வது ஓவரை திரிபுரா அணியில் எம்பி முரா சிங்கால் பந்துவீச வந்தபோது அவருடைய மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்டு வெளியேறினார். இருப்பினும், இவருடைய அதிரடி ஆட்டம் எதிரணியை கலங்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
மேலும், ஹர்திக் பாண்டிய இந்த போட்டிக்கு முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் விளையாடி இருந்தார். அந்த போட்டியை தொடர்ந்து இப்போது உள்நாட்டு டி 20 போட்டியில் ரெட்-ஹாட் ஃபார்மில் விளையாடி வருகிறார்.
ஏனென்றால், இந்த போட்டிக்கு முன்னதாக நவம்பர் 23 அன்று குஜராத்திற்கு எதிராக 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். அதைப் போல, உத்தரகாண்டிற்கு எதிரான அடுத்த போட்டியில் வெறும் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். எனவே, அவர் அசத்தலான பார்மில் இருப்பதால் இந்தியாவுக்காக அவர் வரும் போட்டிகளில் விளையாடும் போது இன்னும் அவரது பார்ம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.