“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!
திலக் வர்மாவை ரிடையர்டு அவுட் ஆக சொன்ன ஹர்திக் பாண்டியா முடிவு தவறானது என சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் பேசியுள்ளனர்.

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த ஒரு துணிச்சலான முடிவு, கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 204 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் “ரிடையர்டு அவுட்” (Retired Out) ஆக அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
19-வது ஓவரில், 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா மெதுவாக ஆடுவதாகக் கருதிய ஹர்திக் பாண்டியா இந்த முடிவு எடுத்து அடுத்த பேட்ஸ்மேனான மிட்செல் சாண்ட்னரை இறங்க சொன்னார். ஆனால், இந்த மாற்றம் பலனளிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த போதிலும், மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எனவே, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் மும்பை தோல்விக்கு காரணம் திலக் வர்மாவை ரிடையர்டு அவுட் செய்தது தான் என கூறி வருகிறார்கள். அவர்களை போலவே முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது கருத்துகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியின் போட்டிக்கு பிறகு பேசியுள்ளார்கள்.
சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசும்போது ” திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்தது ஒரு தவறான முடிவு என்று நான் நினைக்கிறேன். அவர் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார், அது உண்மையில் மெதுவாக இருக்கலாம், ஆனால் அவருக்கு இன்னும் சிறிது நேரம் கொடுத்திருக்கலாம். ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நிலைத்து நிற்கும்போது, அவர் எப்போது வேண்டுமானாலும் பெரிய ஷாட்களை அடிக்க முடியும். இது ஒரு அவசரமான முடிவு, இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் ” இது ஒரு இளம் வீரரின் நம்பிக்கையை சிதைக்கும் முடிவு. திலக் வர்மா ஒரு திறமையான வீரர், அவருக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனென்றால் ஒரு கேப்டனாக உங்கள் வீரர்களை நம்புவது மிகவும் முக்கியம். இப்படி ஒரு முடிவு எடுப்பது அவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தலாம்,” என்று தெரிவித்தார்.