மகிழ்ச்சியும்..வருத்தமும்! ரோஹித் சர்மா முதல் பிரஜ்ஞானந்தா வரை!
சென்னை : இன்றைய நாளில் (15-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், தரவரிசையில் முன்னேறிய ரோஹித் சர்மா முதல் கிராண்ட் செஸ் தொடரில் வெளியேறப் போகும் பிரஜ்ஞானந்தா வரை ஒரு சில முக்கியச் செய்திகளைப் பார்க்கலாம்.
தரவரிசையில் முன்னேறிய ரோஹித் சர்மா.!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 765 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். 2-வது இடத்திலிருந்த இளம் வீரரான ஸுப்மன் கில் 763 புள்ளிகளில் ஒரு இடம் சரித்திருக்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் 824 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
ரசிகர்கள் இன்றி நடக்கும் டெஸ்ட் போட்டி ..!
வங்கதேச அணி, பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் 2 அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற இருக்கிறது. இதில் கராச்சியில் நடைபெறப் போகும் அந்த 2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற போகும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மைதானத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிபி கூறியுள்ளது.
தோதா கனேஷ் – கென்யா தலைமை பயிற்சியாளர்..!
2026-ம் ஆண்டில் நடைபெறப் போகும் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கென்யா கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான தோதா கனேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலைத் தோதா கனேஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் – ரவி சாஸ்திரி..!
இந்த ஆண்டின் இறுதியில் அதாவது நவம்பர் 22-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரைக் குறித்து நேற்று ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா 2-1 எனத் தொடரைக் கைப்பற்றுவார்கள் எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி, இந்த தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று சாதனை படைக்கும் எனப் பேட்டி அளித்துள்ளார்.
இந்த விஷயம் சற்று வருத்தம் தருகிறது – ஜெய்ஷா..!
சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிகைக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெய்ஷா கூறியதாவது, “மக்கள் டெஸ்ட் போட்டிகளை காண்பதற்கு 5 நாட்களுக்குச் சேர்த்து டிக்கெட்டுக்கு காசு கொடுத்துப் பார்க்க வருகிறார்கள், ஆனால் போட்டி 3 நாட்களில் முடிந்து விடுகிறது. இது சற்று வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது” எனக் கூறி இருக்கிறார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ..!
அமெரிக்காவில் சின்சினாட்டியில் நடைபெற்ற வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெரும் அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய ஜன்னிக் சின்னெர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்ஸை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் செஸ் டூர் ..!
நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் தமிழக வீரரான பிரஜ்ஞானந்தா ராபிட் சுற்று போன்ற போட்டிகளைத் தொடர் தோல்வியடைந்ததால் அந்த தொடரை விட்டு வெளியேறும் தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், தமிழக ரசிகர்கள் சற்று வருத்தத்திலிருந்து வருகின்றனர்.