ஹாங்சோ ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி!
சீனாவில் நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றிப் பெற்றுள்ளது.

சீனா : நடைபெற்று வந்த ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் ஜீவன்-விஜய் ஜோடி பங்கேற்று விளையாடி வந்தனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் இரட்டையர் ஜோடியான கான்ஸ்டான்டின் மற்றும் ஹென்ட்ரிக்கை எதிர்த்து விளையாடினார்கள்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் செட்டில் தோல்வியடைந்தார். ஆனால் அங்கிருந்து மீண்டெழுந்த இந்திய ஜோடி அடுத்ததாக நடைபெற்ற இரண்டு செட்டையும் வெற்றிப் பெற்றது. இறுதியில், 4-6, 7-6, 10-7 என்ற செட் கணக்கில் த்ரில்லாக வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது.
இந்த ஜோடி இதே போல இதற்கு முன் நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஆகியோருக்கு எதிராக காலோவேயிடம் முதல் செட்டை பறிகொடுத்த பிறகு இரண்டாவது செட்டையும் அதன்பிறகு நடந்த டைபிரேக்கரையும் கைப்பற்றி அசத்தி இருந்தார்கள்.
நேற்று போட்டி முடிந்த பிறகு ஜீவன் பத்திரிகையாளர்களிடம் வெற்றி பெற்றதை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “நான் இந்த நேரத்தில் ஹாங்சோவுக்கும், விஜய் சுந்தருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த ஆண்டின் முதல் இரட்டையர் ஜோடியாக நாங்கள் வென்ற பட்டம் இதுதான். மேலும், எங்களிடம் ATP 250 பட்டமும் உள்ளது”, என பேசி இருந்தார். தற்போது, சாம்பியன் பட்டம் வென்ற இந்த இந்திய ஜோடிக்கு இந்திய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.