உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கூகுள் அளித்த கௌரவம்!
நேற்று இந்திய இளம் செஸ் வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதை கௌரவிக்கும் வகையில் கூகுள் இன்று தனது டூடுல் டிசைனை செஸ் வடிவில் மாற்றியுள்ளது.
கூகுள் : சிங்கப்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் நேற்று தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டார். மொத்தம் 14 சுற்றுகளாக இந்த போட்டி நடைப்பெற்றது.
13 சுற்று வரையில் இருவருமே 6.5 எனும் பாய்ண்ட்களுடன் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குகேஷ், டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். 18 வயதான குகேஷ் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சாதனையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதனை பாராட்டும் வகையில், கூகுள் தனது டூடுல் டிசைனை மாற்றியுள்ளது. ஏதேனும் சிறப்பு தினம், உலகளாவிய போட்டிகளின் இறுதி பட்டத்தை வென்றவர்களை கௌரவிக்கும் வண்ணம் சிறப்பு டூடுலை கூகுள் மாற்றியமைக்கும். அதே போல உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் வென்றதை அடுத்து கூகுள் அதனை மாற்றியுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.