ஊக்கமருந்து சோதனை; தங்கப்பதக்கம் வென்ற சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் தடை.!
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை.
கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக, பளுதூக்கும் வீராங்கனையான சஞ்சிதா சானுவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி (NADA) நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த 29 வயதான இவர் இரண்டு முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சிதா சானு, சோதனையில் அனபோலிக் ஸ்டீராய்டு, மற்றும் ட்ரோஸ்டனோலோன் மெட்டாபொலைட் போன்ற தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இந்திய பளு தூக்குதல் சம்மேளனத்தின் (IWF) தலைவர் சஹ்தேவ் யாதவ், சானுவுக்கு (NADA) 4 ஆண்டு தடை விதித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், கிளாஸ்கோவில் நடந்த 48 கிலோ பிரிவில் தங்கம் வென்ற சஞ்சிதா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் கோல்ட் கோஸ்டில் நடந்த போட்டியில், அவர் மீண்டும் 53 கிலோ பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
சஞ்சிதா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் அவர் அனபோலிக் ஸ்டீராய்டு டெஸ்டோஸ்டிரோன் சோதனை செய்ததையடுத்து, சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பால் (IWF) தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 இல், உலக அமைப்பு அவரது தடையை நீக்கியது.