பிரக்ஞானந்தாவுக்கு முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் வாழ்த்து..!
இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு, ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, கார்ல்சனின் நகர்வுகளை உண்ணிப்பாக கவனித்து, தனது காய்களை நகர்த்தினார். கார்ல்சனும் விரைவாக தனது காய்களை நகர்த்தினார்.
அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இருவரும் பொறுமையாக இருந்தனர். மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 28 நிமிடங்கள் செலவிட்டார். பிறகு பிரக்ஞானந்தாவும் தனது நகர்வுகளை தாமதப்படுத்தினார். இறுதியில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளைப் பெற்றனர்.
இதனால் முதல் சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது. மீண்டும் இன்று இரண்டாம் சுற்று நடைபெறுகிறது இதில் பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ், பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாயின் புகைப்படத்தைப் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து போட்டிகளிலும் தாயுடன் சென்று கலந்து கொண்ட பெருமைக்குரியவர் என்ற முறையில், தாயின் ஆதரவு ஒரு சிறப்பான ஆதரவு. சென்னையை சேர்ந்த இந்தியன் இரண்டு நியூயார்க் கவ்பாய்களை வீழ்த்தியுள்ளார். கடினமான நிலைகளில் மிகவும் விடாப்பிடியாக இருந்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.