கால்பந்து உலகில் புதிய”மைல்கல்”! ரொனால்டோ படைக்கப் போகும் புதிய சாதனை!
சென்னை : கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது மைல்கல் சாதனை ஒன்றைப் படைக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இது வரையில் கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தற்போது, ரொனால்டோ அடுத்ததாகப் படைக்கப் போகும் சாதனைக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கால் பந்து உலகத்தில் அதிகமாகச் சம்பாதிக்கும் வீரரின் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவர் தான் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தாண்டி வெளியிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சமூகத் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்டவர் ஆவார். மேலும், சமீபத்தில் அவர் புதிதாகத் தொடங்கிய யூட்யூப் சேனலும் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபரை பெற்றுள்ளது. தற்போது, அவரது UR Christiano யூடுயூப் சேனல் 50 மில்லியன் சப்ஸ்க்ரைபரை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இருப்பினும் இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்ட அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை. இந்த நிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய மைல்கல் சாதனை படைக்க உள்ளார்.
அது என்னவென்றால் அவர் இதுவரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை விரைவில் படைக்க உள்ளார். அதாவது அனைத்து கிளப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் மற்றும் ஃப்ரண்ட்லி போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து இதுவரை 899 கோல்கள் அடித்திருக்கிறார். இன்னும் ஒரு கோல் அடித்தால் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல் சாதனையைப் படைப்பார். இதற்காக அவரது ரசிகர்கள் எப்போது அந்த 900 கோலை அடிப்பார் எனக் காத்திருக்கிறார்கள்.
தற்போது 38 வயதாகும் ரொனால்டோ தனது ஓய்வு குறித்தும் சமீபத்தில் அவரது யூட்யூப் சேனலில் பேசி இருந்தார். அதில், ‘இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் எனவும் ஓய்வு பெற்ற பிறகு கால்பந்து கிளப் ஒன்றை வாங்கும் எண்ணம் இருப்பதாகவும்’ அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது