எனது குழந்தைகளுடன் சூப்பர் ஹீரோக்கள் படங்களை பார்க்கிறேன்.. இதுதான் அதற்கு காரணம் – மெஸ்ஸி
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவருமான, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, மேலும் ஒரு கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். அது இன்டர் மியாமி கிளப் அணிக்காக வெல்லும் கோப்பையாக இருக்கும். லியோனல் மெஸ்ஸி தற்போது அமெரிக்க நாட்டின் கால்பந்து கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இன்டர் மியாமி அணி தற்போது லீக்ஸ் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி 9 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும், இந்த ஆண்டிற்கான லீக்ஸ் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இன்டர் மியாமி கிளப் அணி நுழைந்துள்ளது. பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
குறிப்பாக, மெஸ்ஸி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கோப்பை வென்றுள்ளார். உலகக் கோப்பை உட்பட மொத்தம் 43 கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்படுகிறது. 36 வயதான லியோனல் மெஸ்ஸி “Ballon d’Or” என்ற விருதை 7 முறை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த விருது சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.
இதனிடையே, கடந்த மாதம் முதல் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, 9 கோல்கள் அடித்திருந்தாலும், அவரது கொண்டாட்டங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, இம்முறை கோல் அடித்த பிறகு மெஸ்ஸி, மார்வெல் சூப்பர் ஹீரோக்களை போன்று கொண்டாடி வருகிறார். இது தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த சமயத்தில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய இன்டர் மியாமி அணியின் ஃபார்வர்ட் லியோனல் மெஸ்ஸி, Ballon d’Or விருது மிகவும் முக்கியமான விருது ஆகும். ஏனென்றால், அது வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். ஆனால், நான் அது குறித்து அதிகம் நினைப்பதில்லை. அணியாக இணைந்து கோப்பை வெல்வதே தான் முக்கியம் என்பது மனநிலை. நான் எனது கேரியரில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைந்துள்ளேன். இப்போது எனது கிளப் அணிக்காக புதிய இலக்கை கொண்டுள்ளேன். அதற்காக தான் இங்கு உள்ளேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், எனது மூன்று குழந்தைகளும் இன்னும் விடுமுறையில் உள்ளனர். அவர்கள் இன்னும் பள்ளியைத் தொடங்கவில்லை, எனவே ஒவ்வொரு இரவும் எனது மூன்று மகன்களுடன் இணைந்து தற்போது மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் படங்களை பார்த்து வருகிறேன். கோல் அடுத்த பிறகு மார்வெல் சூப்பர் ஹீரோ போல கொண்டாடுவதற்கு அது தான் காரணம். ஒவ்வொரு முறையும் நான் விளையாடும் போதும், கோல் அடிக்கும் போதும் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் போன்று கொண்டாடுகிறேன் என்று எனது குழந்தைகள் சொன்னார்கள்.
இப்படித்தான் ஆரம்பித்த இந்த பழக்கத்தைத் தொடர்கிறேன் என்று கோல் அடித்த பிறகு தனது கொண்டாட்ட முறையை மாற்றியுள்ளது குறித்த கேள்விக்கு மெஸ்ஸி பதிலளித்தார். எனவே, எனது வெற்றியை தொடர விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டார். நாஷ்வில் கிளப் அணிக்கு எதிராக இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.