FIFAWorldCup2022 : உலக சாதனையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கிய ரொனால்டோ.! போர்ச்சுகல் அசத்தல் வெற்றி.!
ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர்.
இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் ரொனால்டோ அதிக (5) உலககோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2006, 2010, 2014,2018 மற்றும் 2022 ஆகிய 5 உலககோப்பைகளில் கோல் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
அதன் பிறகு ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் கானாவின் ஆண்ட்ரே அய்வ் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் மீண்டும் சமநிலைக்கு வந்தது. போர்ச்சுகல் அணி ஆட்டத்தின் 78 மற்றும் 80 ஆவது நிமிடத்தில் ஜோனோ பெலிக்ஸ் மற்றும் ரஃபேல் லியோ அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை போர்ச்சுகல் பக்கம் கொண்டு வந்தனர்.
ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தில் திருப்புமுனையாக கானா அணியின் ஒஸ்மான் புகாரி கோல் அடித்தார். ஆனால் ஆட்டத்தின் இறுதியில் கானா அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை தோற்கடித்து இந்த உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.